சுடச்சுட

    

    நடுக்கடலில் 4 நாள்கள் தத்தளித்த நாகை மீனவர்கள் 7 பேர் மீட்பு

    By DIN  |   Published on : 10th September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, கடந்த 4 நாள்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேர் வெள்ளிக்கிழமை காலை சக மீனவர்களால் மீட்கப்பட்டு, கரை சேர்க்கப்பட்டனர்.
    நாகை, கீச்சாங்குப்பம் பாலசுப்பிரமணியன்  என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம் (35), சதீஷ் (30), சின்னப்பிள்ளை (50), ரெத்தினசாமி (30), மோகன் (29), கந்தசாமி (55), ஆதர்ஷ் (25) ஆகியோர் கடந்த ஆக. 31-ஆம் தேதி நாகையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
    அவர்கள், செப். 5-ஆம் தேதி நாகையிலிருந்து சுமார் 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால், படகை கரைக்கு செலுத்த முடியாத நிலையில் அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்க நேரிட்டது.
    இதுதொடர்பாக, கீச்சாங்குப்பம் மீனவக் கிராமத்துக்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, மீனவப் பஞ்சாயத்தார் மீன்வளத் துறையின் உதவியை நாடியுள்ளனர்.
    இந்நிலையில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்களிடமிருந்த வாக்கி டாக்கி மூலம், தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்துப் பேசியுள்ளனர்.
    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வேறு சில மீனவர்கள் இந்த உரையாடலைக் கேட்டு, பழுதான படகுடன் தத்தளிக்கும் மீனவர்களைத் தேடும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனர். 2 படகுகளில் தேடுதல் வேட்டையை மேற்கொண்ட அவர்கள், வியாழக்கிழமை இரவு பழுதான படகிலிருந்த மீனவர்களைக் கண்டறிந்து, மீட்டனர்.
    பழுதான படகிலிருந்த மீனவர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு, மற்றொரு படகில் பழுதான படகை பிணைத்து இழுத்து வந்து வெள்ளிக்கிழமை காலை நாகையில் கரையேற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai