நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது: சாலை ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை
By DIN | Published on : 11th September 2016 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க கருத்தரங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க மாநிலக் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வி. ஏகநாதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஏ. ராஜமுனியாண்டி, ஆர். முருகானந்தம், எஸ். காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் ச.இ. கண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் மு. மாரிமுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பணியிலிருந்த சாலை ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு கொடுக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். 50 ஆண்டுகளாக நிரந்தர அரசு ஊழியராக இருக்கக் கூடிய சாலை ஆய்வாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசு சேவைத்துறையாக உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பணியிடத்தை நிரந்தரப் பணியிட வரிசையில் சேர்த்து உத்தரவு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள 800 சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.