Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2,22,810 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வழங்கினார்.
    நாகப்பட்டினத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை நடைபெற்றன. கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 20 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 213 என மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டன.
    பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவை மனுதாரர்களுக்கு அறிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ. 3,465 வீதம் ரூ. 1,17,810 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை அபிவிருத்தி இயக்கம் கால்நடை காப்பீட்டுத் திட்டம் சார்பில் இடி, மின்னல் தாக்கி இறந்துபோன மாடுகளின் உரிமையாளர்கள் 4 பேருக்கு தலா ரூ. 20,000 வீதம் ரூ. 80,000 -க்கான காசோலைகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும்போது இறந்தவரின் வாரிசுதாரருக்கு கருணைத் தொகையாக ரூ. 25,000 -க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் குழந்தைவேலு, கால்நடைத்துறை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai