வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 13th September 2016 07:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகையில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நாகை வட்ட மையம் சார்பில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், மாம்பாக்கம் உள்வட்டம் (பிர்க்கா) வருவாய் கிராம உதவியாளர்கள் எஸ். கன்னியப்பன் மற்றும் எஸ். ராஜாராம் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை தடுக்கச் சென்றபோது விபத்தில் இறந்தனர்.
பணியின்போது பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், உயிர் நீத்தோருக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் வி. கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி. பால்ராஜ் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் வி. பாலசுப்பிரமணியன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலர் டி. இளவரசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் பேசினர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் மதிமாறன் தலைமை வகித்தார். செயலர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் எம். நடராஜன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நாகை மாவட்டச் செயலர் எஸ். தியாகராஜன், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் து. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.