சுடச்சுட

    

    கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 2 தனியார் பேருந்துகள், நாகையில் காவல்துறையின் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளன.
    கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை நீடித்து வருகிறது. தமிழ்நாடு பதிவு கொண்ட பேருந்துகள், சுமை வாகனங்கள், சிற்றுந்துகள் கர்நாடக மாநிலத்தில் வன்முறையாளர்களால் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. பல வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
    தமிழகத்தில், கர்நாடக மாநிலத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான வன்முறைகள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், கர்நாடக மாநில வன்முறையாளரின் செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஆங்காங்கே சில சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
    2 மாநிலங்களுக்கிடையே நீடிக்கும் இந்தப் பிரச்னைகளால், தமிழகத்தில் உள்ள கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் காவல்துறையின் பாதுகாப்புக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.
    இதன்படி, நாகையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு திங்கள்கிழமை பயணப்படவிருந்த, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 2 தனியார் பேருந்துகள், தங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்து, வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டன.
    இதில், ஒரு பேருந்தின் கர்நாடக மாநில பதிவு எண்ணை மறைத்து, தமிழக பதிவு எண் ஒட்டப்பட்டது. மற்றொரு பேருந்தில், கர்நாடக மாநில பதிவு எண்ணை மறைத்து வெள்ளைத் தாள் ஒட்டப்பட்டுள்ளது. 2 நாள்களாக அந்தப் பேருந்துகள் காவல்துறையின் பாதுகாப்புடன், நிறுத்தப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai