சுடச்சுட

    

    நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  நடைபெற்ற இயந்திர நடவுப் பணியை தடுத்த  26 பெண்கள் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேர் என மொத்தம் 71 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள மேமாத்தூர் கிராமத்தில் பாய் நாற்றங்கால் மூலம் இயந்திர நடவு மேற்கொள்வதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    இதனால் கடந்த குறுவை சாகுபடி பருவத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் போனது.
    இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. மேலும், கிராமத்தில் சட்டம் -   ஒழுங்கு பாதிக்கப்பட்டதால், போலீஸார் இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    நீதிமன்ற உத்தரவு பெற்று நடவுப் பணி: இதுதொடர்பாக,  மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  பாலசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலசுப்பிரமணியன் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இயந்திர நடவு செய்துகொள்ளலாம் எனவும், அதற்கு நாகை மாவட்ட  காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
    அதன்படி, பாலசுப்பிரமணியன், போலீஸார் பாதுகாப்புடன் தனக்குச் சொந்தமான வயலில் புதன்கிழமை இயந்திரம் மூலம் நடவு செய்தார். அப்போது, மேமாத்தூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி கலையரசி தலைமையில், அங்கு வந்த பெண் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இயந்திர நடவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  நடவுப் பணியை தடுத்ததுடன், நாற்றையும் சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, அவர்கள் 20 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
    சாலை மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் பி. சீனிவாசன் தலைமையில்  ஒன்றிணைந்த மேமாத்தூர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காளியம்மன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு அவர்கள் உடன்படாததால், சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கலிதீர்த்தான் (மயிலாடுதுறை), வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மேமாத்தூர் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    இப்பிரச்னை தொடர்பாக, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த புகாரின்பேரில், செம்பனார்கோயில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் புதன்கிழமை மாலை  விடுவிக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai