சுடச்சுட

  

  "பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'

  By DIN  |   Published on : 16th September 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடகிழக்குப் பருவமழையால் பெரிதும் பாதிக்கப்படும் நாகை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி அறிவுறுத்தினார்.
  நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
  வடகிழக்குப் பருவமழையால் பெரிதும் பாதிக்கப்படும் மாவட்டம், நாகை மாவட்டம். எனவே, வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைத் தடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள
  வேண்டும்.
  பருவமழை குறித்த தகவல்களை அனைத்துத் துறையினரும் பரிமாறிக் கொள்ளும் வகையில், அனைத்துத் துறை அலுவலர்களிடையே தகவல் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். மாவட்டத்தில் உள்ள பேரிடர் தகவல் தொடர்பு சாதனங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  மாவட்டத்தில் உள்ள செல்லிடப்பேசி உயர்கோபுரங்களின் உறுதித் தன்மையையும், பெரிய கட்டடங்களில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அலுவலர்கள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் போதுமான அளவில் இருப்புக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் கரைகளின் உறுதித் தன்மையை அறிந்து, தேவையான இடங்களில் கரைகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  மின்வாரிய ஊழியர்கள், போர்க்கால அடிப்படையிலான பணிக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை சரிவரப் பராமரிப்பதில் உள்ளாட்சி ஊழியர்கள் கவனம் செலுத்த வேண்டும். பாம்புக்கடி மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மருந்துகளை மருத்துவத் துறை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
  மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களையும், பேரிடர் எச்சரிக்கை கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்புப் பணிக்காக துணை ஆட்சியர்கள் நிலையிலான அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள், பணி ஒதுக்கப்பட்ட வட்டத்தில் தங்கியிருந்து பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றார்
  ஆட்சியர்.
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர் மற்றும் காவல்துறையினர், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai