பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 25 பேர் கைது
By DIN | Published on : 16th September 2016 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்குரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்தும், மயிலாடுதுறையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 25 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டியகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான த. ஜெயராமன் தலைமையில், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம், சிபிஐ (எம்.எல்), சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், மயிலாடுதுறை டாக்டர் வரதாச்சாரியார் பூங்கா வளாகத்தில் ஒன்றிணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாகச் சென்று, காமராஜர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் நா. இளையராஜா, நாகை மாவட்டச் செயலர் தெ. மகேஷ், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேசு, மாவட்ட அமைப்பாளர் அய்யா. சுரேசு, சந்திரசேகரன், தமிழர் தேசிய முன்னணியின் நாகை மாவட்டத் தலைவர் ரா. முரளிதரன், சிபிஐஎம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். வீரச்செல்வன், எஸ்டிபிஐ கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் ஷபீக் அஹமது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி 1 பெண் உள்பட 25 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.