Enable Javscript for better performance
நாகை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
    விவசாய சங்கங்கள், தொழிற்சங்கள் நடத்திய இப் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தேசிய லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் ஆதரவு  தெரிவித்திருந்தன.
    12,800 கடைகள் அடைப்பு...
    இந்த முழு அடைப்புப் போராட்டம், நாகை மாவட்டத்தில் முழு அளவில் நடைபெற்றது.
    நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், வேதாரண்யம், தலைஞாயிறு, வேளாங்கண்ணி, பொறையாறு, கீழ்வேளூர், திருமருகல் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
    காவல்துறை கணக்கெடுப்புப்படி, நாகை மாவட்டத்தில் 12,800 கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
    மாவட்டத்தின் சில பகுதிகளில் மருந்தகங்கள், பூக்கடைகள் குறைந்தளவில் திறக்கப்பட்டிருந்தன. அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல திறந்திருந்தன. தேநீர் கடைகள், உணவகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடியிருந்தன.
    வாகனப் போக்குவரத்து...
    தனியார் வாடகை கார்கள், ஆட்டோக்கள், லாரிகள் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டிருந்தது. அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
    காவல்துறை கணக்கெடுப்புப்படி, நாகை மாவட்டத்தில் 800 லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிகிறது. இதனால், அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடியிருந்தன.
    1,500 பேர் கைது...
    நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன் மற்றும் திமுக, காங்கிரஸ், மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கீழ்வேளூர், சிக்கல், நாகை, நாகூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இடதுசாரிகள் சார்பு விவசாய அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் உள்பட சுமார் 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
    நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, கீழையூர், கீழ்வேளூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சுமார் 1500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
    தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தொடக்க நிலை வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.
    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம்போல இயங்கின.
    முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது.
    சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காட்டில்  2,000 கடைகள் அடைப்பு: சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காட்டில்  சுமார் 2,000 கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    சீர்காழி வர்த்தக சங்கம், வர்த்தக நலச்  சங்கம் சார்பில் தென்பாதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து  நிலையம், கடைவீதி, கொள்ளிடமுக்கூட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 1,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    இதேபோல், கொள்ளிடம் பகுதியிலும்  கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    கொள்ளிடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒன்றிய விவசாய கூட்டமைப்பு சங்கம், திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கர்நாடக  முதல்வர் சித்தராமையா உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 45 பேரை கொள்ளிடம் போலீஸார் கைது செய்தனர்.
    திருவெண்காடு பிரதான சாலையில், திமுக கிழக்கு ஒன்றியச் செயலர் சசிக்குமார் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை பூம்புகார் போலீஸார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறையில் 156 பேர் கைது : மயிலாடுதுறையில் ரயில், சாலை மறியல், முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 156 பேரை போலீஸார் கைது செய்தனர். வணிகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கடையடைப்பு செய்தனர்.
    மயிலாடுதுறை வணிகர் சங்கத் தலைவர் ஆர். அசோக், காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுச் செயலர் ஆறுபாதி எஸ். கல்யாணம் ஆகியோர் தலைமையில்  ஒன்றிணைந்த வணிகர்கள் மற்றும் விவசாயிகள், கிட்டப்பா அங்காடியிலிருந்து பேரணியாகச் சென்று  வருவாய்க் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
    ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 20 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 16 பேரும் தனித்தனியாக  கைது செய்யப்பட்டனர்.
    மயிலாடுதுறை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அமைப்பினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    நாகை வடக்கு மாவட்ட திமுக செயலர் நிவோதா எம். முருகன் தலைமையில் ஒன்றிணைந்த திமுகவினர்  மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,  மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம் தலைமையில், கூறைநாட்டில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் 373 பேர் கைது: முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, வேதாரண்யம் பகுதியில் மறியிலில் ஈடுபட்ட 373 பேர் கைது  செய்யப்பட்டனர். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
    மருதூர் தெற்கு கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக  விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் எல்.எஸ்.இ. பழனியப்பன் தலைமை வகித்தார். இதுதொடர்பாக, 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கரியாப்பட்டினம் கடைவீதியில் மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா. மீனாட்சிசுந்தரம், ஒன்றிய திமுக செயலர் மா. சிங்காரவேல் உள்ளிட்ட 65 பேரும், வேதாரண்யம் வடக்கு வீதியில் நகர திமுக செயலர் மா.மீ. புகழேந்தி உள்ளிட்ட 70 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    தலைஞாயிறில் 148 பேர் கைது: தலைஞாயிறு கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு ஒன்றிய திமுக செயலர் மகா. குமார் தலைமை வகித்தார். இந்திய  கம்யூனிஸ்ட் சார்புடைய விவசாய சங்கத்தின் மாவட்டச்  செயலர் எஸ். சம்பந்தம், சிபிஎம் சார்புடைய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் அலெக்ஸாண்டர் மற்றும் ஒரு பெண் உள்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai