சுடச்சுட

    

    சென்னையில் தீக்குளித்த விக்னேஷ் உடலுக்கு மன்னார்குடியில் இறுதிச் சடங்கு: வைகோ, சீமான் பங்கேற்பு

    By DIN  |   Published on : 18th September 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் இறுதிச்சடங்கில் வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
    நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவீதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ் (25) தீக்குளித்து, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். அவரது உடல் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் விக்னேஷின் சொந்த ஊரான மன்னார்குடிக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கொண்டுவரப்பட்டு, மேலவீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்னேஷ் உடலில் கட்சி கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பாஜக மாநில பொதுச்செயலர் கருப்பு எம்.முருகானந்தம், திமுக தலைமை சட்டத் திருத்தக் குழு உறுப்பினர் ஒரத்தநாடு பி.ராஜமாணிக்கம், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ்.தினகரன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலர் எஸ்.ரெங்கநாதன், தமிழகம், புதுச்சேரி கூட்டமைப்பு விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் நெல்.ஜெயராமன், கலை-இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலர் இரா.காமராசு உள்ளிட்டோர் விக்னேஷ் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
    பின்னர், விக்னேஷின் உடல் வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியே மூவாநல்லூர் சாலை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பாண்டியன் தீ மூட்டினார்.
    இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
    திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தலைமையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 17 காவல் ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள், 250 சிறப்பு காவல் படையினர், 50 ஆயுதப்படை போலீஸார் என 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai