சுடச்சுட

    

    தரங்கம்பாடியில் விரைவில் மீன்பிடித் துறைமுகம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்

    By DIN  |   Published on : 18th September 2016 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் ஆய்வுக்குப் பின்னரான அனுமதி கிடைத்தவுடன், நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
    தரங்கம்பாடி வட்டம், மாணிக்கப்பங்கு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:
    சுனாமியில் வீடு இழந்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் விரைவான நடவடிக்கைகளால், அண்மைக்காலமாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், விரைவாக விடுதலை பெற்று வருகின்றனர்.
    தரங்கம்பாடியில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்த ஆய்வுக்குப் பின்னர், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார். முன்னதாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணிக்கப்பங்கு கிராமத்தைச் சேர்ந்த 248 பேருக்கு ரூ. 1.24 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களும், 4 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 48 ஆயிரத்துக்கான காசோலைகளும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை உத்தரவுகளும் வழங்கப்பட்டன.
    ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் சுபா நந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai