சுடச்சுட

    

    நாகை - நாகூருக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 19th September 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக  மண்டல அளவிலான நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், நாகை- நாகூருக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    அரசுப் போக்குவரத்துக்கழக நாகை மண்டல நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மண்டல அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
    மண்டல பொது மேலாளர் கே. கெளரிசங்கர் தலைமை வகித்தார். மண்டல துணை மேலாளர் (வணிகம்) எஸ். ராஜா, கிளை மேலாளர் சி. திருமறைநாதன், பல்வேறு நுகர்வோர் குழுக்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்திய கோரிக்கைகள்:
    டி. குலசேகரன், மயிலாடுதுறை: மணல்மேடு பகுதியில் புதிய மேம்பாலம்  கட்டப்பட்டுள்ளதால், நாகை - சிதம்பரத்துக்கு மணல்மேடு வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். மணல்மேடு - காட்டுமன்னார்கோவிலுக்குப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
    எஸ். பாஷ்யம், நாகப்பட்டினம்:
    பேருந்துகளை பழுதின்றியும், தூய்மையாகவும்  பராமரிக்க வேண்டும். ஓட்டுநர்கள் ஓய்வின்றி பணியாற்றுவதை மாற்ற அவர்களுக்கு உரிய ஓய்வு வழங்க வேண்டும்.
    நாகை - நாகூர், நாகை - வேளாங்கண்ணி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். பேருந்துகளில் ஒலிக்கச் செய்யப்படும் பாடல்களின் ஒலி அளவைக் குறைக்க வேண்டும்.
    என். பலராமன், நாகப்பட்டினம்: மழைக்காலம் வரும் முன்பாக பேருந்துகளின் கூரைகளையும், ஜன்னல் கண்ணாடிகளுக்கான கட்டமைப்புகளையும் சீர் செய்ய வேண்டும். ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்தும் வகையில், நாகை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாகூர் வரையிலான  வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். முதியவர்களின்  நலன் கருதி பேருந்து படிக்கட்டுகளின் உயரத்தைக் குறைக்க வேண்டும்.
    மண்டல பொது மேலாளர் கே. கெளரிசங்கர், மண்டல துணை மேலாளர் (வணிகம்) எஸ். ராஜா, துணை மேலாளர் ஆர். சுந்தரபாண்டியன், கிளை மேலாளர் சி. திருமறைநாதன் ஆகியோர் நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசியது:
    நாகை மண்டலத்தில் 11 கிளைகள் மூலம், நாள் ஒன்றுக்கு 604 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 44,219 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
    நாகை கிளைக்கு மட்டும் கடந்த ஆண்டில் 11 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 24 புதிய பேருந்துகள் நாகை மண்டலத்துக்கு வழங்கப்படவுள்ளது.
    மழைக்காலத்துக்கு முன்பாகவே பேருந்துகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். பயணிகள் பேருந்தில் எளிதாகவும்,  பாதுகாப்பாகவும் ஏறும் வகையில் படிக்கட்டுகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
    கூட்ட நிறைவில், போக்குவரத்துக்கழக அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய கையேடு, நுகர்வோர் குழுக்களுக்கு வழங்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai