சுடச்சுட

  

  வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்: வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியில் சுணக்கம்

  By DIN  |   Published on : 20th September 2016 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மழையின் காரணமாக, தடைபட்டிருந்த உப்பு  உற்பத்திப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், காவிரி பிரச்னை காரணமாக லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யும் பணி சுணக்கமடைந்துள்ளது.
  அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உணவு மற்றும்  தொழிற்சாலை தேவைக்கான உப்பு உற்பத்தி செய்யப்படுவது  வழக்கம். இவற்றில் இரண்டு பெரிய நிறுவனங்கள் உள்பட சிறு, குறு  உற்பத்தியாளர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கம்போல, ஜனவரி இறுதியில் தொடங்கிய நிகழாண்டு  பருவத்துக்கான உப்பு உற்பத்திப் பணிகள் ஏப்ரல் மற்றும் ஜூன்  மாதங்களில் ஏற்பட்ட மழையால் அவ்வப்போது பாதிப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஏற்பட்ட மழையின் காரணமாக உற்பத்திப் பணி மீண்டும் பாதிப்புக்குள்ளாயின. கடந்த ஆண்டு (20015) உற்பத்தியை ஒப்பிடும்போது, நிகழாண்டில் 65 முதல் 70 சதவீத அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடந்துள்ளது. தொடக்க நிலையில், உப்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு  ரூ. 450 முதல் ரூ. 500 வரையில் இருந்தது. சில மாதங்கள்  இடைவெளியில் உப்பின் கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 600 முதல் ரூ. 700 வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்டில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு தற்போது   அதிகமான அளவில் வெயில் உணரப்படுவதால், குறிப்பிட்ட அளவு  பரப்புகளில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளன.
  உப்பு ஏற்றுமதியில் சுணக்கம்:  காவிரி பிரச்னை காரணமாக, தற்போது நிலவும் சூழலில் கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கு  லாரிகள் மூலம் உப்பு ஏற்றுமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
  இந்த பணியில் தேசிய நிலையில் உரிமங்கள் பெற்ற லாரிகளே அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
  வேதாரண்யத்தில் வழக்கமான நாள்களில் ஏற்றப்படும் உப்பின் அளவை கணக்கிடும்போது, கடந்த நான்காவது நாளாக 20 சதவீதம்  என்ற அளவில் மட்டுமே வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஆக. 16) காவிரி பிரச்னையை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை வெளியூர் லாரிகளில் உப்பு ஏற்றுவது மிக குறைவாகவே இருந்தன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai