Enable Javscript for better performance
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு

    By DIN  |   Published on : 20th September 2016 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்றுப் பாசனத்தை எதிர்பார்த்து நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள், இம்முறை மானாவாரி நிலங்களைப்போல மழையை நம்பி நேரடி நெல் விதைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் மானாவாரி நிலப்பரப்பு நீங்கலாக மற்ற வயல்களில் ஆற்றுப் பாசனம் செய்யப்பட்டு நெல் சாகுபடி மேற்கொள்வது வழக்கம்.
    வேதாரண்யம் பகுதியில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், தலைஞாயிறு பகுதியில் 27 ஆயிரம் ஏக்கரிலும் வழக்கமாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
    நிகழாண்டுக்கான சம்பா சாகுபடி பணிகள் தொடங்கும் பருவம், மழை பொய்த்துப்போன நிலையில், மேட்டூர் அணையும் காலத்தில் திறக்கப்படாததால், நிலத்தின் மேல்பரப்பு  ஈரத்தன்மை முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது.
    இந்நிலையில், தலைஞாயிறு பகுதியில் சம்பா தொகுப்பு திட்டம் போன்றவைகளை பயன்படுத்தி சுமார் 27,500 ஏக்கரில் உழவு செய்யப்பட்டுள்ளது. இதில், 19,500 ஏக்கரில்  நேரடியாக நெல் விதைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    வேதாரண்யம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உழவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள போதிலும், மகாராஜபுரம் கிழக்கு, மேற்கு போன்ற தாழ்வான நிலப்பகுதியை கொண்டுள்ள இடங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
    தாழ்வான நிலப்பரப்புகளிலும், சாகுபடி காலத்தின் பிற்பகுதியிலும் தண்ணீர் பாசனம் செய்ய வசதியாக அமைந்துள்ள வயல்களில் மத்திய கால நெல் வகையைச் சேர்ந்த சி.ஆர். 1009, பையூர் பொன்னி (பிபிடி) போன்ற ரகத்தை விதைப்பு செய்துள்ளனர்.
    இதுதவிர ஏடிடி-46, ஏடிடி-44, ஏடிடி-38, 39, திருச்சி-3 ரகங்கள் விதைக்கப்பட்டுள்ளன.
    நீண்டகால ரகம் விலை குறைவு: நீண்டகால பயிராக சி.ஆர். 1009 ரக நெல் விதை தொடக்க நிலையில் தனியாரிடத்தில் கிலோ ரூ. 33 வரையில் விற்பனை செய்யப்பட்டது. சாகுபடி  தொடங்கும் பருவகாலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை வீழ்ச்சியடைந்து தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 28 வரை விலை குறைந்துள்ளது.
    இதே ரகம் அரசு கிடங்குகளில் ரூ.10 மானியம் போக ரூ. 18.05-க்கு கிடைக்கிறது. இதேபோல், அரசு கிடங்குகளில் விற்கப்படும் சன்னரக நெல் விதையின் விலையில் ரூ. 10 மானியமாக வழங்கப்படுகிறது.
    விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் நெல் மணிகள் முளைத்துவர சீரான ஈரத்தன்மை அவசியமானது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் வந்து சேர்வதற்குள் மழை பெய்தால் முளைப்புத்திறன் இயல்பாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர் விவசாயிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai