சுடச்சுட

  

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: விவசாயிகள், அரசியல் கட்சியினர் வரவேற்பு

  By DIN  |   Published on : 21st September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை டெல்டா மாவட்ட விவசாயிகள், அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
  தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி ப. கல்யாணம்:
  உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை உறுதி செய்ய தமிழக அரசு மேற்கொண்ட சட்டப் பேராட்டத்துக்கு கிடைத்த பெரும் பலன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்கும், சட்டப் போராட்டம் நடத்திய தமிழக முதல்வருக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி.
  உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு எவ்வித காலதாமதமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள்படி, போதுமான அதிகாரம் கொண்ட, சுதந்திர அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்.
  காவிரி பிரச்னை உருவாகும் முன்பாக, மேட்டூர் அணைக்கு ஆண்டு ஒன்றுக்கு 378 டி.எம்.சி தண்ணீர் கிடைத்து வந்தது. இந்த அளவு, இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி-ஆகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி-ஆகவும் குறைக்கப்பட்டது. எனவே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, தமிழகத்தை விட, கர்நாடக மாநிலத்துக்கு அதிக சாதகமானது என்பதை கர்நாடக அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டு, அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் வகையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமைமையை உறுதி செய்ய வழிவிட வேண்டும்.
  காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் வி. தனபாலன்:
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை உறுதி செய்யும் வகையில் உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்கும்,  சட்டப்போராட்டம் மேற்கொண்ட தமிழக அரசுக்கும் நன்றி. முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துதல், சர்தார் சரோவர் அணை போன்ற பிரச்னைகளில் விரைவாகவும், சுமுகமாகவும் தீர்வு கண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 4 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்புகிறோம்.
  தற்போது கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரைக் கொண்டு காவிரி கடைமடை மாவட்டப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி சாத்தியமற்றது என்றாலும், மழையை நம்பி பணிகளைத் தொடர்கிறோம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai