Enable Javscript for better performance
நாகை அருகே கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டியெடுப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் துப்புத் துலங்- Dinamani

சுடச்சுட

    

    நாகை அருகே கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டியெடுப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் துப்புத் துலங்கியது

    By DIN  |   Published on : 21st September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது  தெரியவந்ததையடுத்து, அவரது சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
    நாகை, ஆர்யநாட்டுத் தெரு, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆர். சங்கர் (27). இவரது மனைவி சத்யா (25). கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் காவடி திருவிழாவுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை.
    இதுகுறித்து அவரது மனைவி சத்யா அளித்த புகாரின் பேரில், நாகை நகர காவல் நிலையப் போலீஸார், காணவில்லை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
    இந்நிலையில், நாகை மேலக்கோட்டைவாசல், நடராஜன்பிள்ளை தெருவைச் சேர்ந்த செ. கார்த்தீசன் (28), அந்தனப்பேட்டை, வெட்டுக்குளத் தெருவைச் சேர்ந்த ப. சிவா (27) ஆகியோர் அந்தனப்பேட்டை கிராம நிர்வாக  அலுவலர் ஆர். செல்வத்திடம் திங்கள்கிழமை சரணடைந்து, கடந்த ஆண்டு காணாமல்போன ஆர். சங்கரை தாங்கள் தான் கொலை  செய்தோம் என தெரிவித்தனர்.
    இதையடுத்து அவர்கள் 2 பேரையும், நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையில், கார்த்தீசன் மனைவியை சங்கர் ஆபாச கோணத்தில் படம் பிடித்ததன் காரணமாக, கார்த்தீசன், சிவா மற்றும் அவர்களின் நண்பர்கள், அந்தனப்பேட்டை  வெட்டுக்குளத்தெருவைச் சேர்ந்த மா. அன்பரசன், க. மணிகண்டன், செ. சுரேஷ், ப. மார்க்ஸ், ப. சிவனேசன் ஆகியோரும், மேலும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்ததாகத் தெரியவந்தது.
    2015-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி வீட்டிலிருந்த புறப்பட்ட சங்கரை, மது விருந்துக்கு அழைத்துச் சென்று, பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்து, அந்தனப்பேட்டை வெட்டுக்குளத் தெருவில் உள்ள அன்பரசனின் வீட்டுத் தோட்டத்தில் அவர்கள் புதைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
    இதையடுத்து, சங்கரின் சடலத்தை தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை வட்டாட்சியர் தமிமுல் அன்சாரி முன்னிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பு, காவல் ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.
    கார்த்தீசன், சிவா ஆகிய 2 பேரும் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் சுமார் 4 அடி ஆழம் தோண்டியபோது, 4 பெரிய எலும்புகளும், ஒரு மண்டை ஓடு மற்றும் சில எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டன. அந்த எலும்புகள் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
    சங்கர் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்த போலீஸார், சங்கரை கொலை செய்தது தொடர்பாக செ. கார்த்தீசன், ப. சிவா, மா. அன்பரசன், க. மணிகண்டன், செ. சுரேஷ், ப. மார்க்ஸ், ப. சிவனேசன் ஆகிய 7 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    மேலும் 2 பேர்...
    இந்தக் கொலை சம்பவத்தில் கார்த்தீசனின் நண்பர்கள் தினகர், ஆர். சிவா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில், தினகர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகை கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆர். சிவா என்பவர் சாராயக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ளார்.
    துப்புத் துலங்கியது...
    சங்கர் கொலையில் தொடர்புடைய 2 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாகக் காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இருப்பினும், சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய தினகர், கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்த போது, அவரிடமிருந்து சங்கரின் செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai