சுடச்சுட

  

  புதுப்பிக்கப்பட்ட அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் அமைச்சர் ஆய்வு: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

  By DIN  |   Published on : 21st September 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை, அக்கரைப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய மீன்பிடித் துறைமுகத்தை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  இந்த துறைமுகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் புதன்கிழமை (செப். 21) திறந்து வைக்கவுள்ளார்.
  அக்கரைப்பேட்டை புதிய மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியது:
  மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  இதன்படி, மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்கும் நாகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு உத்தரவிட்டது.
  இதைத் தொடர்ந்து, உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 45.21 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள அனுமதி கிடைக்கப் பெற்று பணிகள் நடைபெற்றுள்ளன.
  இப்பணியின் கீழ், நாகை கடுவையாற்றின் வடக்குக் கரையில் 250 மீட்டர் நீளத்தில் படகு அணையும் சுவரும், தென்கரையில் 500 மீட்டர் நீளத்துக்குப் படகு அணையும் சுவரும் அமைக்கப்பட்டுள்ளன.
  கரையோர வசதிகளாக, அலுவலகக் கட்டடம், வலை பின்னும் கூடம், ஏலக்கூடம், பொருள்கள் பாதுகாப்புக் கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிப்பறை, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடுவையாற்றின் தென்கரையில் கூடுதலாக 450 மீட்டர் நீளத்துக்குப் படகு அணையும் சுவர் அமைக்கவும், படகுகள் எளிதாகச் சென்று வரும் வகையில் ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  படகுகளை பழுது பார்க்கும் வகையிலான சாய்வு தளம், கலன்களை ஏற்றி, இறக்க வசதியாக 100 டன் எடையைக் கையாளக்கூடிய பளுதூக்கியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
  இந்த மீன்பிடித் துறைமுகத்தை தமிழக முதல்வர், காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார். இதன்மூலம், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம மக்களின் சமூகப் பொருளாதாரம் சிறக்கும் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, செயற்பொறியாளர் வீரமணி, மீன்வளத்துறை இணை இயக்குநர் சுப்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai