சுடச்சுட

    

    கோதண்டபுரம் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு

    By DIN  |   Published on : 22nd September 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியை அடுத்த கோதண்டபுரம்  மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    கொள்ளிடம் ஒன்றியம், கோதண்டபுரத்தில்  ராமகிருஷ்ணா அரசு உதவிப் பெறும்  மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச்  சேர்ந்த சுமார் 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 736 மாணவ, மாணவிகள் பள்ளியில் மதிய சத்துணவு  சாப்பிட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, இப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து பரிசோதித்தார். தொடர்ந்து, அவர் சமையல் அறையை பார்வையிட்டார். அப்போது, தலைமை ஆசிரியர் பிரபாகரனிடம், எம்எல்ஏ பி.வி. பாரதி கூறியது:
    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவை   சமைத்து வழங்கும் முன் அதை சமையலர், அமைப்பாளர்கள் சாப்பிட்டுப் பார்த்து சிறிது நேரம் கழித்து பின்னர் பரிமாற வேண்டும். சத்துணவுக்கு அரசு வழங்கும் பொருள்களைக் கொண்டு தரமாக, சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும்.
    சமையல் அறையில் அன்றைய தினத்துக்குத் தேவையான விறகுகளை மட்டும் வைத்திருந்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றார் பி.வி. பாரதி. சமையலறை கட்டடம், பள்ளிக்கு சுற்றுச்சுவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பள்ளிக்குச் செல்லும் சாலை ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் தலைமை ஆசிரியர் பிரபாகரன் கோரிக்கை விடுத்தார்.
    கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ பி.வி. பாரதி உறுதியளித்தார்.
    ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி துணைத்  தலைவர் எஸ். ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உதவி தலைமை ஆசிரியர்  ஞானசேகரன், ஆசிரியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai