சுடச்சுட

  

  நாகை மீன்பிடித் துறைமுகத்தை காணொலி காட்சியில் திறந்து வைத்தார் முதல்வர்

  By DIN  |   Published on : 22nd September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுப்பிக்கப்பட்ட நாகை, அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார்.
  187 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டது நாகை மாவட்டம். இந்த மாவட்டத்தில் 46 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மீனவர்கள், மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் பிரதான தொழில்களில், வேளாண்மைக்கு அடுத்த நிலையில் இரண்டாமிடத்தில் உள்ளது மீன்பிடித் தொழில்.
  மீன்பிடிப்பில் சிறந்து விளங்கும் நாகையில் மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி, மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் அவசியமானது.
  இதையொட்டி, மீனவர்களின் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில், நாகை, அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தை புதுப்பித்து, விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ. 45.21 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.
  நாகை கடுவையாற்றின் வடக்குக் கரையில் 250 மீட்டர் நீளத்தில் படகு அணையும் சுவர், தென்கரையில் 500 மீட்டர் நீளத்தில் படகு அணையும் சுவர், அலுவலகக் கட்டடம், வலைப் பின்னும் கூடம், ஏலக்கூடம், பொருள்கள் பாதுகாப்புக் கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிப்பறைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக இந்தத் துறைமுகம் புதுப்பிக்கப்பட்டது. இந்தத் துறைமுகத்தின் திறப்பு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்தைத் திறந்து வைத்தார்.
  இதையடுத்து, நாகை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, இனிப்புகள் வழங்கினார்.
  மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
  580 மீன்பிடிக் கலன்களை இயக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் துறைமுகத்தின் மூலம் 28 ஆயிரம் மீனவர்கள் பயனடைவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai