கோடியக்கரையில் கால்நடை தடுப்பூசி முகாம்
By DIN | Published on : 24th September 2016 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோடியக்கரையில், வன உயிரின சரணாலய விலங்குகளுக்கு நோய்த் தொற்று வராமல் தடுக்கும் வகையில், சுற்றுப்பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பறவைகள் சரணாலயமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு, அரிய வன உயிரினமாகக் கருதப்படும் வெளிமான், புள்ளிமான்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன. இவை தவிர, குரங்கு, காட்டுப் பன்றி, குதிரை, காட்டுப் பூனை, உடும்பு என பல இன காட்டு விலங்குகள் உள்ளன.
இதேபோல், உள்நாட்டில் காணப்படும் பறவைகள் தவிர, வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பூநாரைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட இனப் பறவைகள் இந்த சரணாலயப் பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்த உயிரினங்களுக்கு வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் மூலம் பரவும் நோய்த் தொற்றுகள், காட்டு விலங்குகளுக்கு பரவாமல் தடுக்க பல்வேறு வகையில் கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில், வனத்துறை தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமைத் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து கால்நடை நோய்த் தடுப்பு முகாமை நடத்தின.
இதில், கோடியக்கரை வனச்சரக அலுவலர் சு. பழனிச்சாமி தலைமையிலான குழுவினர், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவர் எஸ். மீனாட்சிசுந்தரம் தலைமையிலான குழுவினர், ஊராட்சித் தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், வனப் பகுதியைச் சார்ந்த இடங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் 200 மாடுகளுக்கு கோமாரி நோய்த் தாடுப்பூசி போடப்பட்டது. மேலும், கோழி, நாய் போன்ற வீட்டு பிராணிகள் உள்ளிட்ட 570 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.