சுடச்சுட

  

  சம்பா நெல் சாகுபடி: வருவாய்க் கோட்ட அளவில் மாதம் 2 முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம்'

  By DIN  |   Published on : 25th September 2016 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிகழ்ப் பருவ சம்பா, தாளடி நெல் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் நடைமுறை இடர்பாடுகளைக் களைய நாகை மாவட்டத்தில், வருவாய்க் கோட்ட அளவில் மாதம் 2 முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.
  நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பா பருவ பாசன நீர், வேளாண் இடுபொருள்கள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர், மேலும் பேசியது:
  நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 3,36,250 ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசன நீரை சிக்கனமாகவும், சரியான முறையிலும் பயன்படுத்தும் வகையில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது 39,410 ஏக்கரில் நேரடி விதைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
  1.30 லட்சம் ஏக்கர் பரப்பில் நடவு மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, இதுவரை 1,625 ஏக்கர் பரப்பில் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. 21,508 ஏக்கருக்கான நாற்றுகள் ஆழ்குழாய் கிணற்று நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பரப்புக்கான நாற்றங்கால் தயாரிப்புப் பணிகள், காவிரி நீர் கிடைக்கப் பெற்ற பின்னர் நடைபெறும்.
  தாளடி நெல் சாகுபடிக்காக 431 ஏக்கரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுமார் 81,250 ஏக்கரில் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  தமிழக அரசு உத்தரவுப்படி, செப். 20-ஆம் தேதி முதல் மேட்டூரிலிருந்து பாசன நீர் திறக்கப்படுகிறது. நாகை மாவட்டத்துக்கு கிடைக்கும் பாசன நீர் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதை பொதுப் பணித் துறை, வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
  சம்பா சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சம்பா தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்துக்கு 18.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  இதன்மூலம், நேரடி நெல் விதைப்புக்கான உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500 வீதம் 1.5 லட்சம் ஏக்கருக்கு ரூ. 7.5 கோடியும், விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 10 வீதம் 1,280 டன் விதைகளுக்கு மானியமாக ரூ. 1.28 கோடியும், களைக்கொல்லி மானியமாக ஏக்கருக்கு ரூ. 280 வீதம் 1.05 லட்சம் ஏக்கருக்கு ரூ. 2.94 கோடியும், சிங்க் சல்பேட்டுக்கு ஏக்கருக்கு 10 கிலோவுக்கு ரூ. 200 பின்னேற்பு மானியமாக 30 ஆயிரம் ஏக்கருக்கு ரூ. 60 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.
  இவைத் தவிர, இயந்திர விதைப்புக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 96 லட்சமும், இயந்திர நடவுக்கு 25 ஆயிரம் ஏக்கருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் பின்னேற்பு மானியமாக ரூ. 5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  பாசன நீர், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள், கடன் வசதி கிடைப்பதில் ஏற்படும் நடைமுறை இடர்பாடுகளைக் கேட்டறிந்து களைய, கோட்ட அளவில் மாதம் 2 முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
  ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படும். விவசாயிகள் தங்கள் பிரச்னைகளுக்கு இந்தக் கூட்டங்கள் மூலம் தீர்வுப் பெறலாம் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.
  கூட்டத்தில், வேளாண் துறை, வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai