சுடச்சுட

    

    நாகையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பெருமாள் கோயில் வடக்கு வீதியில் கொத்தான்குளம் உள்ளது. கொத்தான்குளம் மேல்கரையில் உள்ள வீடுகளில் சொந்தமாகவும், வாடகைக்கும் என 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வீடுகளின் மேற்கூரைகள் ஓடுகளாலும், ஆஸ்பெடாஸ் கூரைகளாலும், கீற்றுக் கூரைகளாலும் அமைந்துள்ளன.
    இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் கூரை வீடுகள் அமைந்துள்ள பகுதியில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்த கூரை வீடுகளுக்கு தீ பரவியது. தகவலறிந்து வந்த நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து சில அடி தூரம் பறந்து தண்ணீரின்றி, புற்கள் வளர்ந்துள்ள கொத்தான்குளத்தில் விழுந்தது. இதனால் கொத்தான்குளம் மேல்கரை, கீழ்கரையில் உள்ள மரக்கிளைகள் தீப்பிடித்து எரிந்தன. இதேபோல், மேலும் 4 சிலிண்டர்கள் வெடித்தன. இதனிடையே கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், தீ முழுவதும் அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தது.
    இந்த தீ விபத்தில் சாந்தி, குருமூர்த்தி, பன்னீர்செல்வம், பிரியா, நிறைமதி, செல்வி உள்ளிட்ட 14 பேரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், கூரை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் நகை, பணம் உள்ளிட்டவை எரிந்து போயின.
    நாகை கோட்டாட்சியர் சி. முத்துமாரி, வட்டாட்சியர் தமிமுல் அன்சாரி, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், நாகை நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai