சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் 4,335 பதவியிடங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல்

  By DIN  |   Published on : 28th September 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் 4,335 பதவியிடங்களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக அக். 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நாகை மாவட்டத்தில் 21 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 214 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 434 ஊராட்சித் தலைவர்கள், 3,426 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 123 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 117 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
  தேர்தல் வாக்குப் பதிவுக்கென மாவட்டத்தில் 2,344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  முதல் கட்டமாக அக். 17-ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக அக். 19-ஆம் தேதியும் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும்.
  முதல் கட்டம்... கீழையூர், கொள்ளிடம், குத்தாலம், சீர்காழி, திருமருகல், வேதாரண்யம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேளாங்கண்ணி, திட்டச்சேரி, மணல்மேடு பேரூராட்சிகளுக்கும், வேதாரண்யம், மயிலாடுதுறை நகராட்சிகளுக்கும் அக். 17-ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு
   நடைபெறும்.
  இரண்டாம் கட்டம்... கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செம்பனார்கோவில், தலைஞாயிறு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், தங்கரம்பாடி, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேரூராட்சிகளுக்கும், சீர்காழி, நாகப்பட்டினம் நகராட்சிகளுக்கும் அக். 19-ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும்.
  ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவுக்கு வாக்குப் பெட்டிகள் அதிகம் தேவை என்பதையொட்டி, ஆந்திர மாநில நெல்லூர் மாவட்டத்திலிருந்து கூடுதலாக 1,000 வாக்குப் பெட்டிகளும், நகர்ப்புற தேர்தல் வாக்குப் பதிவுக்காக சிவகங்கை மாவட்டத்திலிருந்து 430 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டு, ஆய்வுக்குள்படுத்தப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன.
  வாக்கு எண்ணிக்கைக்காக மாவட்டத்தில் 18 வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai