வேதாரண்யம் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறை மூலம் நடைபெறும் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேதாரண்யம் கோவை. சுப்பிரமணியன், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் 58 அரசுப் பள்ளிகள் உள்பட 125 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையுள்ளது.
மேலும், இந்த ஒன்றியத்தில் 6,7,8-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் வகுப்புக்கு ஓர் ஆசிரியரும், தலைமையாசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு முரண்பாடுகள் உள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றால் அது புதிய கல்வி ஆண்டில் அதிகரிக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
கடந்த ஆண்டு இதேபோன்ற முரண்பாடுகள் நிலவிய நிலையில், பணி நிரவலின்போது உதயஜோதி என்ற ஆசிரியை நாகை ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இதுவரை மாத ஊதியம், இதர சலுகைகள் வழங்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற நிலையில் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி வேதாரண்யம் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான பணி நிரவலை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.