சீர்காழி வட்டாசியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் சர்வர் பாதிப்பால் கணினிகள் செயல்படவில்லை. இதனால் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது வருவாய்த் துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பட்டா சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியை செய்துள்ளது.
அவ்வகையில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. சீர்காழி பகுதியில் திருவாலி,திருப்புன்கூர், திருக்கருக்காவூர், மங்கைமடம், கொண்டல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திலும் இ-சேவை மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பள்ளி, கல்லூரி சேர்க்கை நடைப்பெற்று வரும் நிலையில், வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை பெறுவதற்கு அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் இ-சேவை மையத்திற்கு வருகின்றனர்.
ஆனால் கடந்த சில நாள்களாக இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு காரணமாக சான்றிதழ்களை குறித்த நேரத்தில் மாணவ, மாணவியர் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் பட்டா பெறுவதிலும், திருமண உதவித் தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதிலும் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தரமான கணினிகள் பயன்பாட்டில் இல்லை. அத்துடன் அவை மிகக் குறைந்த வேகத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. அத்துடன் அடிக்கடி சர்வர் பாதிப்பு காரணமாக அலுவலர்கள் சரிவர சான்றிதழ்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் சுவாமிநாதன் கூறியது: வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையம் கடந்த சில வாரங்களாக சரிவர இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் இவ்வேளையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும், மாணவ, மாணவியரும் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இ-சேவை மையங்களில் அரசு அறிவித்துள்ள கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுவாமிநாதன்.
வட்டாட்சியர் விளக்கம்
இப்பிரச்னை குறித்து சீர்காழி வட்டாட்சியர் பிரேமசந்திரன் கூறியது:
தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் சான்றிதழ்கள் தேவைப்படும் அனைவரும் ஒரே நேரத்தில் கணினி மூலம் விண்ணப்பிக்கின்றனர். இதனால் நெருக்கடியான நேரத்தில் சர்வரில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சீர்காழி இ-சேவை மையத்தில் பணிபுரிபவர்களிடம் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, நெருக்கடியான நேரத்தில் பதிவேற்றம் செய்யாமல் மறுநாள் காலை 8 மணிக்கே பணிக்கு வந்து, விண்ணப்பங்களை ஸ்கேன் செய்வது, அப்லோடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடும்படியும் மாலை 7 மணிக்கு பிறகு சர்வரில் வேலைப்பளு குறையும் என்பதால் அந்த நேரத்திலும் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, நிலுவை இல்லாமல் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.