நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் சென்ற பெண்ணை வழிமறித்து தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வெள்ளிக்கிடங்கு நாகக்குளம் பகுதியில் நடைபெற்ற முத்தரையர் பிறந்த நாள் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சில இளைஞர்கள் சாலையில் நின்று ஆடிக்கொண்டிருந்தனராம். அப்போது, வண்டுவாஞ்சேரி கிராமம், வெள்ளிக்கிடங்கு பகுதியைச் சேர்ந்த கண்ணையன் மனைவி காந்தி (35), தாணிக்கோட்டகம் கடைவீதிக்குச் சென்றுவிட்டு அந்த வழியே சைக்கிளில் வீட்டுக்குச் சென்றாராம். சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம், வழியை விட்டு நிற்கும்படி காந்தி கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், காந்தியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவர், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், வாய்மேடு காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து, வெள்ளிக்கிடங்கு பகுதியைச் சேர்ந்த தனபால் மகன்கள் சக்திவேல், சூரி (எ)பொன்மொழிபாண்டியன், காமராஜ் மகன் சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.