கொள்ளிடம் ஒன்றியம், நல்லூரில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள் (குழு எண் ஜி-11) கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், நல்லூர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை நடத்தினர். நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளி ஆசிரியர் வீரமணி தொடங்கிவைத்தார். இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தியபடி வந்தனர். இப்பேரணி முக்கிய வீதிகளின் வழியாக உத்திராபதியார் ஆலயம் வரை நடைபெற்றது.
பின்னர், அங்குள்ள திருமண மண்டபத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாணவி கார்த்திகா புற்றுநோய் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினார். மாணவி கலைவாணி வரவேற்றுப் பேசினார்.
இக்கருத்தரங்கில் பேசிய மருத்துவ அலுவலர் அருண், புற்று நோய்க்கான அறிகுறிகள், வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள், பெண்களுக்கான முன் உடல் பரிசோதனைகள், புற்றுநோய்க்கான சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இதில் பங்கேற்ற பெண்களுக்கு சுகாதார செவிலியர்கள் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை செய்தனர். மாணவி கனிமொழி நன்றி கூறினார்.