மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரி பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வரை சுமார் 20 சதவீத வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கைவிடக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் சுமார் 20 சதவீத வாகனப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பகல் நேரங்களில் தடைப்பட்டிருந்தது. ஆட்டோ, லாரிகள், தனியார் வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தில் பாதிப்பு உணரப்பட்டது.
ஆர்ப்பாட்டம்: வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கையை வலியுறுத்தி சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம், அனைத்து கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் பி. ஜீவா தலைமை வகித்தார்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கார், வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க நாகை மாவட்டத் தலைவர்ஆர். ரவீந்திரன் தலைமை வகித்தார்.
சிஐடியு நாகை மாவட்டச் செயலாளர் சீனி. மணி, சிறு விற்பனையாளர்கள் சங்க நாகை மாவட்டச் செயலாளர் டி. துரைக்கண்ணு, தமிழ்நாடு மின்சார வாரிய மத்திய அமைப்பின் நாகை திட்டச் செயலாளர் எம். கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், ஜி.ஸ்டாலின், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் ராயர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சீர்காழியில்: சீர்காழியில் இருசக்கர மோட்டார் வாகன பழுதுநீக்குவோர் நல சங்கம் சார்பில் 126 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டதன்படி, இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பகல் 11மணிக்கு பிறகு சீர்காழி நகரில் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சுமார் 10 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருவாரூரில்: திருவாரூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல் உள்ளிட்டோர் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர். இதில் லாரி உரிமையாளர்கள் சங்கம், டாரஸ் லாரி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கம், ஆரூர் டாக்ஸி ஓட்டுநர் சங்கம், வேன் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மன்னார்குடியில்.: மன்னார்குடி மேல ராஜவீதி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நலச் சங்க மன்னார்குடி வட்டக் கிளைத் தலைவர் ஜெ.வி.கனகசால்வாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சேகர், சிஐடியு நிர்வாகிகள் ஜி.ரெகுபதி, டி.ஜெகதீசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, மன்னார்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்கம் செய்யும் பட்டறைகள் மூடப்பட்டிருந்தன.
காரைக்காலில்: மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்டோக்களை செவ்வாய்க்கிழமை இயக்காமல் முடக்கினர். காரைக்காலில் உள்ள ஒருசில தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது பேருந்துகளை இயக்காமல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக அரசுப் பேருந்துகளும் குறைந்த அளவே காரைக்காலில் இயக்கப்பட்டன. காரைக்கால் பேருந்து நிலையத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.