நாகை மாவட்டம், திருக்குவளை அருகே வீட்டுக் கூரை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து கணவர், மனைவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். காயமடைந்த அவர்களின் மகன் மற்றும் மகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், திருக்குவளை காவல் சரகம், மேலவாழக்கரை ராமன்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52). இவரது மனைவி நாகம்மாள்(45). இவர்களின் மகள் விஜயலெட்சுமி(23), மகன் சபரிராஜன்(20). இவர்கள் 4 பேரும், தங்களது கூரை வீட்டின் மேற்கூரையில், கீற்றுப் பழுதடைந்த பகுதிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களை வைத்து, கம்பியால் கட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் கட்டிக் கொண்டிருந்த கம்பி, மேலே இருந்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில், அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்தக் காயமடைந்த நாகம்மாள் திருக்குவளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
விஜயலெட்சுமி, சபரிராஜன் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருக்குவளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.