Enable Javscript for better performance
பயிர்க் காப்பீடு விவகாரம்: விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் 96-ஆவது நாளில் தாற்காலிக ஒத்திவைப்ப- Dinamani

சுடச்சுட

    

    பயிர்க் காப்பீடு விவகாரம்: விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் 96-ஆவது நாளில் தாற்காலிக ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் மேற்கொண்டு வந்த காத்திருப்புப் போராட்டம், அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 96-ஆவது நாளில் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
    போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.
    கத்தரிப்புலம், குரவப்புலம், செம்போடை ஆகிய கிராமங்களுக்கு கடந்த 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், 25 சதவீதம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், மற்ற இடங்களில் அளிக்கப்பட்டதைப் போல், நூறு சதவீத இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அரசு தரப்பினர், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இழப்பீட்டை அளிப்பதாக தெரிவித்தனர்.
    எனினும், இழப்பீடு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அதிருப்தி அடைந்த விவசாயிகள், கடந்த டிச.18-ஆம் தேதி முதல் கத்தரிப்புலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் அவ்வப்போது அரசு தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை.
    தலைவர்கள் ஆதரவு: இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், பி. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வந்தனர். வியாழக்கிழமை பாமக மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.
    நூறாவது நாள் போராட்டத்தின்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பார் எனவும் பேசப்பட்டது.
    பேச்சு வார்த்தை: இதனிடையே, வியாழக்கிழமை இரவு போராட்டப் பந்தலில் சார் ஆட்சியர் கார்த்திகேயன், துணைக் காவல் கண்காணிப்பாளர் கே. பாலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். எனினும், உடன்பாடு எட்டப்படவில்லை.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை போராட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆகையால், விவசாயிகள் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
    இந்தச் சூழலில் வட்டாட்சியர் ஆர். சங்கர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் 15 முதல் 30 நாள்களில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், காத்திருப்புப் போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். மேலும், அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என்று வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் டி.வி. ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai