Enable Javscript for better performance
வறண்ட நிலையில் தெற்குராஜன் பாசன வாய்க்கால்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகேயுள்ள தெற்குராஜன் வாய்க்கால் வறண்டதால் அதை நம்பியுள்ள கிராமமக்கள் வறட்சியால் தவித்து வருகின்றனர். 
    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் முக்கிய பிரதான பாசன வாய்க்காலாக உள்ள தெற்குராஜன் வாய்க்கால் வாடி, பட்டியமேடு, பாலூரான்படுகை, மாதிரவேளூர், கீரங்குடி, கொன்னக்காட்டுப்படுகை, சரஸ்வதிவிளாகம், சாமியம், குத்தவக்கரை, அனுமந்தபுரம், ஆச்சாள்புரம், கோதண்டபுரம், நாணல்படுகை, நல்லூர், நரிமுடுக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. 
    இந்த வாய்க்கால் மூலம் அப்பகுதியிலுள்ள குளம், குட்டைகளில் நீர் நிரம்பி மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்து வந்தது.  
    ஆண்டுதோறும் இவ்வாய்க்காலில் சித்திரை மாதம் வரை தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ஆடிப்பெருக்கு, மாசிமகம், பங்குனி உத்திரவிழா மற்றும் சித்திரை விழாவின்போது பக்தர்கள் நீராடி செல்வர். சித்திரை மாதத்தில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயிகள் குள்ளகார் நெற்பயிர் சாகுபடி செய்து பயன்பெறுவர். 
    கடந்த சில ஆண்டுகளாக இவ்வாய்க்காலில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. இதனால், இவ்வாய்க்கால் மூலம் நீர் வசதி பெற்ற குளம், குட்டைகள் காய்ந்து வறண்டு போய் கிடக்கின்றன. வறட்சியால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 
    தவிர வாய்க்கால் மற்றும் குளக்கரையோரங்களில் பசுமையாக காட்சியளித்துக்கொண்டிருந்த தென்னை மரம்,  ஈச்சமரம், கொன்றை, விளாமரம் அழிஞ்சி உள்ளிட்ட பலவகையான மரங்களும் அரியவகை மூலிகை செடிகளும் அறவே வளர்ச்சியில்லாமல் அழிந்துவிட்டது. எனவே, மழைக் காலங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் வீணாக்காமல் தேக்கி வைத்து, மக்களுக்கு பயனுள்ள வகையில் தண்ணீர் சேமிக்க திட்டமிட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai