Enable Javscript for better performance
அனைத்து கோயில்களின் உலோகசிலைகளையும் ஆய்வு செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து கோயில்களின் உலோக சிலைகளையும் ஆய்வு செய்யக் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் உலோகச் சிலைகளையும் ஆய்வு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என, தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுதொடர்பாக, அதன் செயலாளர் அழகிரிசாமி  வெளியிட்ட அறிக்கை:
    அண்மை காலமாக, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களுக்கு சிலைகள் செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், சிலை கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    பழனி முருகன் கோயிலுக்கு சிலை செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறிப்பட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக ஸ்தபதி ஒருவர்  கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
    இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஸ்தபதிகளில் பத்ம விருது பெற்றவரும் உள்ளார். அவரது விருதை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். சிலை  கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். 
    தமிழகத்தில், பட்டியலில் உள்ள  34 ஆயிரம் திருக்கோயில்கள் மற்றும் பட்டியலில் இடம்பெறாத 36 ஆயிரம் திருக்கோயில்களில்  உள்ள தெய்வங்களின்  உலோகத் திருமேனிகளின் பட்டியலைத் தயார் செய்து, ஆய்வுக்குட்படுத்த  தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    சிலைக் கடத்தல்  தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலின் பணிக் காலத்தை  நீட்டிப்பு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளஅனைத்து இணை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களில்  உள்ள சிலைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai