Enable Javscript for better performance
இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடம்- Dinamani

சுடச்சுட

    

    இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், அருண்மொழித்தேவன் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு,  புதிய கட்டடம் கட்டித் தர நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    அருண்மொழித்தேவன் ஊராட்சியில் உள்ள  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திமுக ஆட்சிக் காலத்தில் 1996 -இல் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. 
    இந்த அலுவலகம்  மூலம் அருண்மொழித்தேவன், உக்கடை, அன்பனாதபுரம்,  கோட்டூர், பில்லாளி ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 3,500 -க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர்.
    இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்தும், சுவர்கள் பலமிழந்தும் காணப்பட்டு வருவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    இதனால் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெறுவதற்கு பொதுமக்கள் கட்டடத்தின் உள்ளே அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டதால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமானது அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் தான்  கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர், அலுவலகக் கோப்புகளை பாதுகாப்பதில் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்.
    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலாடுதுறை வட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
    எனவே, பராமரிப்புப் பணிகள் செய்ய முடியாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித் தருவதற்கு நாகை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்மொழித்தேவன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai