Enable Javscript for better performance
நாகை புதிய கடற்கரையில் கோடை விழா இன்று தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகை புதிய கடற்கரையில் கோடை விழா இன்று தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 18th May 2018 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை (மே 18)  தொடங்கி மே 20 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கடற்கரை கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.
    நாகை புதிய கடற்கரையில் மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள், நகைச்சுவை சொற்பொழிவுகள், காவல்துறையின் நாய்கள் கண்காட்சி, பல்சுவை விளையாட்டுப் போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா, பட்டம் விடும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
    இந்த விழாவையொட்டி, நாகை புதிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகள், கோடை விழா நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அப்போது, விழாவில் பங்கேற்பவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசுத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தடையில்லா மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், நாகை சார் ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன், துணை ஆட்சியர் (பயிற்சி) மன்சூர், வட்டாட்சியர் ராகவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai