Enable Javscript for better performance
வேதாரண்யம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்: மீனவ கிராமத்தின- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்: மீனவ கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யம் கடற்கரையில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம் கடற்கரையில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடியே 44 லட்சம்  மதிப்பில் நவீன குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரத்தில் தொடங்கிய பணியை முடக்கினர். மேலும், இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    போலீஸார் குவிப்பு: இந்நிலையில், வேதாரண்யம் நகரம் மற்றும் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியை தொடங்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியலில் ஈடுபட ஆயத்தமாகினர்.
    இதற்கிடையில், குப்பைக் கிடங்கு அமையவுள்ள இடத்துக்கு அருகே நான்குகால் மண்டபம் பகுதிக்கு வந்த மீனவ கிராம நாட்டார் பி.எஸ். சேதுபதி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் குப்பைக் கிடங்கு கட்டுமானப் பணி நடைபெறவுள்ள இடத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது, சுமார் நூறு மீட்டருக்கு முன்னதாக  காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, மீனவ கிராமத்தினரை தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பணியை தடுக்காமல் போராட்டத்தை வேறு இடத்தில் நடத்தவோ அல்லது நீதிமன்றம் செல்லவோ மீனவ கிராமத்தினரை காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமத்தினர் பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.  இந்த போராட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.கே. வேதரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
    பணி தொடக்கம்: மீனவர்கள் கலைந்து சென்றதையடுத்து, கடற்கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நவீன குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணியை நிறுத்தக் கோரி, வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வட்டார அளவிலான மீனவர்களைத் திரட்டி போராட்டத்தை தொடரவுள்ளதாக மீனவ கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai