டெங்கு நோய்த் தடுப்புப் பணிகளில் 445 பணியாளர்கள்: ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் 445 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்


நாகை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் 445 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை நகராட்சிக்குள்பட்ட காரியாங்குடி செட்டித் தெருவில் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நடைபெறும் தூய்மைப் பணிகளையும், பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணியையும் ஆட்சியர் சனிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.
அப்போது, கொசுக்கள் மூலம் பரவும் நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள, வீடுகளின் சுற்றுப் புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்துப் பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் நிகழாண்டில் 19 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.
கொசு புழு ஒழிப்பு மருந்தான டெமிபாஸ் 1,700 லிட்டரும், புகை தெளிக்கும் மருந்து 1,100 லிட்டரும், 199 புகை தெளிக்கும் கருவிகளும் இருப்புக் கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் 445 தற்காலிகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேற்பார்வைப் பணியில் 75 சுகாதார ஆய்வாளர்களும், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் கண்டறியும் மையங்களும், சிகிச்சை பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் ஆட்சியர்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி. சண்முகசுந்தரம், மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் ஏ. சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com