பேரிடர் கால தடுப்பு விழிப்புணர்வு பேரணி, ஒத்திகை

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி, தீத்தடுப்பு தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
நாகையில், மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ல் நடைபெற்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன் தலைமை வகித்துப் பேசும்போது, "புயல், மழை வெள்ளம், நில நடுக்கம் ஆகிய பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் குறித்து வானிலை ஆய்வு மைய தகவலின் அடிப்படையில், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பேரிடர் காலங்களில் அரசு விடுக்கும் எச்சரிக்கையை  பொதுமக்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார் 
முன்னதாக, பேரிடர் கால தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வருவாய்க் கோட்ட அலுவலகத்திலிருந்துப் புறப்பட்ட பேரணியானது பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக பேருந்து  நிலையம் அருகே உள்ள நகராட்சி அவுரித் திடலில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் பங்கேற்ற பல்வேறு துறை அலுவலர்கள், மாணவ-மாணவியர் பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முழக்கமிட்டபடி வந்தனர்.  பின்னர், நாகை  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை வீரர்கள், தீத்தடுப்பு ஒத்திகை செய்துகாட்டினர். மேலும், நாகை மாவட்ட அறிவியல் கழகம் சார்பில் பேரிடர் இன்னல்  தடுப்புக் குறித்த விழிப்புணர்வு  பொம்மலாட்டம்  நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் நாகை சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வக்குமார், வட்டாட்சியர் இளங்கோ, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தமீமுன்அன்சாரி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெயக்குமார், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியும், தீயணைப்புத்துறை சார்பில் செயல்முறை விளக்கமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ராஜ்கமல் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர்கள் பாபு, ஹரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டாட்சியர் சங்கர், விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பழைய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தீயணைப்பு  மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சர்வதேச பேரிடர் குறைப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கங்களைச் செய்து காண்பித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து புறப்பட்ட பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி, முக்கிய வீதிகள் விழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது. வட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். அன்பழகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய பசுமைப் படை இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள், வேதாரண்யம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை தியாகி  நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன் பங்கேற்று, சர்வதேச பேரிடர் குறைப்பு தின பேரணியைத் தொடங்கி வைத்தார்.  
பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி  வளாகத்தில் நிறைவுபெற்றது. தொடர்ந்து, மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின்   தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் தாமைரைச்செல்வன், தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com