உணவில் பல்லி: செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு வாந்தி, மயக்கம்
By DIN | Published On : 04th April 2019 07:13 AM | Last Updated : 04th April 2019 07:13 AM | அ+அ அ- |

நாகை அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 14 மாணவிகள் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளது நாகை அரசினர் செவிலியர் பயிற்சி பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 400 பேர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவியருக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஒரு கேன்டீன் மூலம் உணவு வழங்கப்படுவது வழக்கம். புதன்கிழமை காலை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியருக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, ஒரு மாணவிக்கு வழங்கப்பட்ட சட்னியில், பல்லி துண்டாகிக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பயிற்சி பள்ளி முதல்வர் ஐடா ராஜகுமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கேன்டீனில் காலை உணவருந்திய மாணவியர் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக, அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வரிடம் கேட்டபோது, சுகவீனம் அடைந்த மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவில் பல்லி கிடந்தது குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநருக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.