சீர்காழி அரசு மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்
By DIN | Published On : 04th April 2019 07:10 AM | Last Updated : 04th April 2019 07:10 AM | அ+அ அ- |

சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் முதன்முறையாக பல்வேறு வகையான மூலிகை செடிகளுடன் கூடிய மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனிக் கட்டடத்தில் இயங்கி வரும் சித்த மருத்துவக் கூடத்துக்கு அருகில் முதன்முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதில், பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் உதவியுடன் தழுதாழை, நொச்சி, துளசி, தூதுவளை, பசலை, மாதுளை, பொன்னாங்கன்னி, கீழாநெல்லி, சிறுகண்டபீளை, பிரண்டை, நந்தியாக்கொட்டை, செம்பருத்தி போன்ற பல்வேறு வகையான மூலிகைச் செடிகளுடன் கூடிய மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு, மேற்கண்ட வர்த்தக நிறுவனங்களின் மூலமாகவே பராமரிக்கப்பட உள்ளது.
இந்த மூலிகைத் தோட்டத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக். பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர், ரத்தக் கொடையாளர், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ்அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கே. தேவலதா தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாதன், மருத்துவர்கள் மருதவாணன், அருண்ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சித்த மருத்துவர் சாகுல்ஹமீது வரவேற்றார்.
சித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், ராஜஸ்ரீ, சபிதா, ரஜினி, ஹேமா, பொம்மி, சுபஸ்ரீ மற்றும் மருந்தாளுநர்கள் தாமரைச்செல்வி, கீதா, தனியார் தூய்மை திட்ட மேலாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர் முரளிதரன் நன்றி கூறினார்.