தமிழகத்தில் 60 நாள்களில் ஆட்சி மாற்றம்
By DIN | Published On : 14th April 2019 05:43 AM | Last Updated : 14th April 2019 05:43 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் 60 நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் தெரிவித்தார்.
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு ஆதரவாக வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கருப்பம்புலம், கடிநெல்வயல், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியது:
வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சவுக்கு விவசாயிகளுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் தவறான கொள்கை, நிலைபாடுகளால் மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவது தொடர்கிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பெருநிறுவனங்களுக்கு சாதகமான நிலையையும், மக்களுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தித் தந்தவர் பிரதமர் மோடி.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்படுவது உறுதி. இதேபோல், தமிழகத்திலும் 60 நாள்களில் தேர்தல் நடத்தப்படாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
பிரசாரத்தின்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் குணசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், நிர்வாகி சிவப்பிரகாசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோவை. சுப்பிரமணியன், வெற்றியழகன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அரு. கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.