சுடச்சுட

  


  திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, காலசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
  தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலமாகும். மேலும், அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பெளர்ணமியாக்கி காட்டிய நிகழ்வு நடைபெற்ற தலம் என்னும் சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.
  சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் புரிந்த தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலமும் இதுவாகும். இதை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார திருவிழா நடைபெறும்.
  அதன்படி, நிகழாண்டு இவ்விழா ஏப்ரல் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ஆம் நாளா திங்கள்கிழமை (ஏப்.15) காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர்,  நள்ளிரவில், தருமபுர இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
  இந்த நிகழ்வானது, தீவிர சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடையவுள்ள நிலையில், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வந்தபோது, அவர் திருக்கடையூர் கோயிலில் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தார். 
  அப்போது, மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் வீசிய பாசக்கயிறு, சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால், கடும் கோபத்துடன் வெளிப்பட்ட சிவ பெருமான், எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். மேலும், மார்க்கண்டேயர் என்றும் இளமையாக இருக்க அருள்பாலித்தார் என்பது ஐதீகம். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் காலசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai