இறுதிகட்ட பிரசாரம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, மயிலாடுதுறையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வாக்குச் சேகரித்தனர். 



மயிலாடுதுறையில்...
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, மயிலாடுதுறையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வாக்குச் சேகரித்தனர். 
அதிமுக: அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணியை ஆதரித்து, அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். இதில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் எஸ்.கணேசன், கிளைச் செயலாளர் கே.சோமசுந்தரம், துணைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், நகரத் துணைத் தலைவர் தம்பா கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமமுக: அமமுக வேட்பாளர் எஸ்.செந்தமிழன், சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, நகராட்சிக்கு எல்லைக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டு, கூறைநாடு பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். 
மநீம: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.ரிபாயுதீன், மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆரோக்கியநாதபுரம், பூக்கடைத்தெரு, கூறைநாடு, பேருந்து நிலையம் பகுதி, கச்சேரி சாலை, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், கையில் மக்கள் நீதி மய்யத் தேர்தல் சின்னமான டார்ச் லைட்டை ஏந்தி, பிரசாரம் மேற்கொண்டு, கேணிக்கரை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இதில், மாவட்டப் பொறுப்பாளர் எம்.என்.ரவிச்சந்திரன், மயிலாடுதுறை தொகுதி செயலாளர் எஸ்பிஎன்.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கு. சுபாஷினி, பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கினார். 
தொடர்ந்து, நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன், மாவட்டச் செயலாளர் சு.கலியபெருமாள், மயிலாடுதுறை தொகுதி செயலாளர் தமிழன் காளிதாஸ், தொகுதி தலைவர் கலைசூரியன் உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சுயேச்சை: அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பில், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஆ. ராஜசேகர் தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்குச் சேகரித்தார். அமெரிக்காவாழ் இந்தியரான ஆ. ராஜசேகர், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பணியைத் துறந்து, சொந்த ஊரான மயிலாடுதுறையில் களம் காணுகிறார். 
பிரசாரத்தின் இறுதி நாளன்று, மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் அவர் மும்முரமாக வாக்குச் சேகரித்தார். தன்னைப் போன்று வெளிநாடுகளில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், தன்னலம் கருதாமல் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சீர்காழியில்...
அமமுக
 சீர்காழி நகரில் 24 வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தமிழன் செவ்வாய்க்கிழமை மும்முரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் செந்தமிழன் சீர்காழி தேர் தெற்கு வீதி, கீழவீதி, கீழதென்பாதி, பிடாரி வடக்கு வீதி, காமராஜர் வீதி, ஈசானியத் தெரு, திருக்கோலக்கா, கோயில்பத்து என 24 வார்டுகளுக்கும் சென்று, பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்குச் சேகரித்தார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் என்.சந்திரமோகன், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் வீரா, நகரச் செயலாளர் ஏகே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மநீம
சீர்காழியில் மக்கள் நீதி மய்யத்தினர் செவ்வாய்க்கிழமை இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீனுக்கு ஆதரவாக வாக்குகள் கோரி, சீர்காழி நகர பொறுப்பாளர் சந்துரு தலைமையில், பொறுப்பாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், வேலு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில், தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட்டை ஒளிரவிட்டபடி வாக்குச் 
சேகரித்தனர்.
திருக்கடையூரில்...அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக...
பொறையாறு, ஏப். 16: திருக்கடையூரில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணியை ஆதரித்து கூட்டணிக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். 
அதிமுக வேட்பாளர் எஸ். ஆசைமணியை ஆதரித்து பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்
எஸ்.பவுன்ராஜ் தலைமையில், பாஜக நாகை வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் அமிர் விஜயகுமார், மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் முத்துக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திருக்கடையூர், பொறையாறு, ஆக்கூர், உள்ளிட்ட பகுதியில் மும்முரமாக வாக்குச் சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com