போலீஸார் மீது தாக்குதல்
By DIN | Published On : 17th April 2019 01:48 AM | Last Updated : 17th April 2019 01:48 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் பகுதியில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படையைச் சேர்ந்த போலீஸார் சுபாஷ், கோபிநாத் ஆகியோர் பேச்சாவடி பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீஸார் நிறுத்தியபோது நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளனர். போலீஸார் அவர்களைத் துரத்திச் சென்று பாபு என்பவரை மட்டும் பிடித்துள்ளனர். மற்றோர் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
பிடிபட்ட இருசக்கர வாகனத்தில் 600 மதுப்புட்டிகள் இருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் தப்பியோடிய நபர் மேலும் 4 பேரை அழைத்து வந்து சுபாஷை சுற்றி வளைத்து, உருட்டுக்கட்டை மற்றும் கல்லால் தாக்கினார். மேலும், அவரது செல்லிடப்பேசி மற்றும் காவல்துறை அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...