வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: இருவரிடம் ரூ.16 ஆயிரம் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக இருவரை தேர்தல் பறக்கும் படையினர்

மயிலாடுதுறை அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக இருவரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து, அவர்களிடமிருந்து ரூ.16 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அக்களுர் கிராமத்தில், அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனி வட்டாட்சியர் ஜி. தையல்நாயகி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் து. சேதுபதி உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர், அக்களுர் கிராமத்திற்கு புதன்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அக்களுர் மேலத்தெருவைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் மோகன் (48) வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 8 கவர்களை பறிமுதல் செய்தனர். 
இதேபோல், அக்களுர் கற்பக விநாயகர் தெருவைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், போக்குவரத்துத்துறை தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் கலியபெருமாளிடம் (61) இருந்து, 14 கவர்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை தனி வட்டாட்சியர் ஜி.தையல்நாயகி மற்றும் போலீஸார் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். சோதனையில், 22 கவர்களில், 64 வாக்காளர்களுக்கு தலா ரூ.250 வீதம் வழங்குதற்காக ரூ.16 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com