குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் நீர்
By DIN | Published On : 23rd April 2019 09:37 AM | Last Updated : 23rd April 2019 09:37 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம் அருகேயுள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வழிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்துக்கு குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக சாலையில் தண்ணீர் வழிந்து தேங்கி நிற்கிறது. இதனால், தெற்குப் பொய்கைநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட வடக்குத் தெரு, அய்யனார்கோயில் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைவான அளவிலேயே தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் தண்ணீர் சாலையிலேயே வழிந்து ஓடுவதால் நாகை- வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் விழுந்து செல்லும் நிலையும் தொடர்கிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.