கோயில் திருவிழாவில் ஐஸ் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கோயில் திருவிழாவில் ஐஸ் சாப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கோயில் திருவிழாவில் ஐஸ் சாப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாணகிரி மீனவர் தெருவில் உள்ள ரேணுகாதேவி அம்மன், காளியம்மன் கோயில் குடமுழுக்கு  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அப்பகுதியில் ஏராளமான தள்ளுவண்டிக் கடைகள், தரைக் கடைகள் அமைக்கப்பட்டு பஜ்ஜி, வடை, பாணிபூரி, சுண்டல், ஐஸ், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.
கடும் வெயிலில் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், தங்கள் குழந்தைகள் விரும்பிக் கேட்ட ஐஸ் வகைகளை வாங்கிக் கொடுத்தனர். பின்னர், வீடு திரும்பிய வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 அந்த வகையில், வாணகிரியைச் சேர்ந்த செ. விவேகா (3), வி. மதுஷா (3), வி. கனி (5), உ. மித்ரன் (2), உ. கவிஷா (5), மு. ரஞ்சித் (12), மு. பிரீத்தி(14), பூம்புகார் பகுதியைச் சேர்ந்த பி. அபிஷ் ஆனந்த், பி. மித்ரன், பி. கனிஷ்கா (6), ப.பவித்ரா (4), சீ.அனுசியா (1), ச.சந்தியா (22), ச.சர்மா (11), க. வசந்த் (1), க.பிரமிதா (4), முகேஷ் (5), அனு (4), நமீதா (4), தரங்கம்பாடியைச் சேர்ந்த மு. சபிதா (5) உள்ளிட்ட 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமை மருத்துவர் தேவலதா தலைமையிலான  மருத்துவகுழுவினர், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சீர்காழி வட்டாட்சியர் சபீதாதேவி அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, வாணகிரி கிராமத்தில் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பூம்புகார் போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட ஐஸ் வியாபாரியைத் தேடி வருகின்றனர். மேலும், ஐஸ் மாதிரியை திரட்டி ஆய்வுக்கு அனுப்பும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com