முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இலவச கண்புரை சிகிச்சை: 960 பேர் பயன்
By DIN | Published On : 04th August 2019 01:05 AM | Last Updated : 04th August 2019 01:05 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
நாகை மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம், சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் கிண்டி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கி ஆக. 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 960 பேர் கண் பரிசோதனைகள் செய்து கொண்டனர். இதில், 150 பேர் கண் புரை அறுவைச் சிகிச்சைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, சங்கர நேத்ராலயா மருத்துவர் கஜேந்திரகுமார் வர்மா தலைமையிலான குழுவினர், நடமாடும் அறுவை சிகிச்சை அரங்கில், கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இந்த இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமின் நிறைவு விழா, கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர்கள் ஜி. சந்திரமோகன், என். மணிமாறன் ஆகியோர் கெளரவ அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
பிரைம் கல்லூரித் தாளாளர் என். கோவிந்தராஜ், இயக்குநர் பால்ராஜ், கேட் சென்டர் பொறுப்பாளர் வி. பானுசந்தர், கிண்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். சிவராமன், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் டி.வி. முத்தையா, நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். வெங்கடேசன் ஆகியோர் பேசினர். முகாம் ஏற்பாட்டாளர் கே. அருள்குமார், பிரைம் கல்லூரி சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.