முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை: நாகை எஸ்.பி பேட்டி
By DIN | Published On : 04th August 2019 01:07 AM | Last Updated : 04th August 2019 01:07 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மது குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.
நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
நாகை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், திருட்டு மற்றும் சாராய குற்றங்களைத் தடுக்கவும் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நிகழாண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் நாகை மாவட்டத்தில் 19 ரௌடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சாராய குற்றங்களில் ஈடுபட்டு 13 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
2019-ஆம் ஆண்டில் நாகை மாவட்டத்தில் சொத்துக் களவு தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 106 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. களவு போன சொத்துகளில் ரூ. 20.29 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பு, களவு போன சொத்துக்களின் மதிப்பில் 74 சதவீதம் ஆகும்.
நிகழாண்டில் 34,625 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 40.32 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14,673 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 15 லட்சம் அபராதத் தொகையாக
வசூலிக்கப்பட்டுள்ளது.
இவைத் தவிர, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 464 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 933 வழக்குகளும், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 2,237 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன சட்ட விதி மீறல்கள் தொடர்பாக 1,292 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு, 664 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை விதி மீறல்கள் தொடர்பாக காவல் துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளால் நிகழாண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், விபத்துகள் மூலமான இறப்பு சதவீதமும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 11 சதவீதம்
குறைந்துள்ளது.
மணல் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் மாவட்டத்தில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 248 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 58 லாரிகள், 147 டிராக்டர்கள், 60 மாட்டு வண்டிகள் மற்றும் 8 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டில் மதுவிலக்குக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 2,373 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,057 பேர் கைது செய்யப்பட்டனர். மது குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 296 வாகனங்களும், 2.35 லட்சம் லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்புக்கும், திருட்டு, சாராயக் குற்றங்கள் மற்றும் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும் தேவையான விரிவான நடவடிக்கைகளை மாவட்டக் காவல் துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜேந்திரன்.