முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வழக்கம்போல் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு..!
By DIN | Published On : 04th August 2019 01:07 AM | Last Updated : 04th August 2019 01:07 AM | அ+அ அ- |

காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் பெரிய அளவில் களை கட்டவில்லை எனினும், ஆடிப்பெருக்கு வழிபாடுகள் வழக்கம் போல நடைபெற்றன.
ஆடிப் பட்டம் தேடி விதை என்ற முதுமொழி, ஆடி மாத பருவம் வேளாண் பணிகளுக்கு உகந்த பருவம் என்பதை உணர்த்தக் கூடியதாக உள்ளது.
ஆடி மாதத்தின் 18-ஆம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுவதற்கு ஆன்மிக ரீதியான காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படாவிட்டாலும், வேளாண்மையைச் செழிக்கச் செய்யும் நீர் நிலைகளை வணங்கி, வேளாண் பணிகளைத் தொடங்கும் நாளாகவே காவிரி கடைமடை மாவட்டங்களில் ஆடிப்பெருக்குக் கொண்டாடப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்தப் பண்டிகை, காவிரி ஆற்றங் கரைகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பேரிக்காய், கொய்யாக்காய் உள்ளிட்ட பழங்கள், காப்பரிசி உள்பட சில உணவு பதார்த்தங்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருள்களை நீர் நிலைகளின் கரைகளில் வைத்துப் படையலிட்டு, காதோலை, கருமணி பூ, பழம் ஆகியவற்றை நீர் நிலைகளுக்கு சமர்ப்பிப்பதாக இந்த வழிபாடு இருக்கும்.
அதே போல, ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத் தம்பதியர், திருமண மாலைகளை நீர் நிலைகளில் விட்டு வணங்குவதும், புதுமணப் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வதும் வழக்கம்.
கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்ததால், ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் டெல்டா மாவட்டங்களில் களை கட்டியிருந்தது. ஆனால், நிகழாண்டில் நீடித்து வரும் வறட்சியின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயிருப்பதால், ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை பொதுவெளியில் பெரிய அளவில் காண முடியவில்லை. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கைபம்பு, குடிநீர் குழாய்கள் அருகே மங்களப் பொருள்களை வைத்து வழிபாடு மேற்கொண்டு, குடிநீர் குழாய்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி, தாங்களும் கட்டிக் கொண்டனர்.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை காலை நேரத்தில் நாகை புதிய கடற்கரையில், வழிபாடு மேற்கொண்டனர்.
பாலையூர் உள்பட ஒரு சில பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள நீர் நிலைக்குச் சென்று, அங்கு மங்களப் பொருள்களை வைத்து வழிபாடு மேற்கொண்டு திரும்பினர்.
துலாக்கட்ட காவிரியில்...
காவிரி ஆற்றில் நிகழாண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் நிரப்பப்பட்ட நீரில் குறைந்த அளவிலான பக்தர்கள் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.
மயிலாடுதுறையில் ஆடி 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா, காவிரி துலாக் கட்டத்தில், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில், மயிலாடுதுறை மட்டுமன்றி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் திரண்டு, காவிரியின் இருகரைகளிலும் ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டி, விவசாயம் தழைக்க பொங்கிவரும் காவிரிக்கு நன்றி தெரிவிப்பர். நிகழாண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி வறண்டு காணப்பட்டது. இதனால், ஆடிப்பெருக்கு தினமான சனிக்கிழமை, பக்தர்கள் நீராட வசதியாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் துலாக்கட்டக் காவிரி புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து நிரப்பப்பட்டது.
இதையடுத்து, அதிகாலை முதல் துலாக்கட்ட காவிரிக்கு வந்த பக்தர்கள், காவிரிப் படுகையை வளம் கொழிக்கச் செய்யும் காவிரி நதியை ஆராதிக்கும் விதமாக, காவிரியை கன்னிப்பெண்ணாக கருதி, கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, ஆற்றில் மணல் எடுத்து, படையல் இட்டு கொண்டாடினர். புதுமணத் தம்பதியினர் மாங்கல்யத்தை பிரித்துக் கோர்த்தும், பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டியும் குடும்பத்தினருடன் கொண்டாடினர். அதேசமயம், தண்ணீர் இல்லாத காவிரியில் புனித நீராட முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். இதனால், காவிரி துலாக்கட்டம் களை இழந்து காணப்பட்டது.
சீர்காழியில்...
ஆடிபெருக்கையொட்டி, சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்மதீர்த்தக் குளத்தில் காலை முதல் திரளான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். குளத்தின் படித்துறையில் மண்ணால் விநாயகர் உருவம் செய்து வைத்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், சிறுமிகள் புதிய மஞ்சள்நூல் கட்டிக்கொண்டனர். சிறுவர்கள் அலங்கரிக்கப்பட்ட மரச்சப்பரங்களை வீதிகளில் இழுத்துச் சென்று மகிழ்ந்தனர். இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் ஆடிபெருக்கு விழா நடந்தது. இங்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வழிபாடு செய்தனர். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர்.
அடிபம்புகளில் ஆடிப்பெருக்கு...
திருக்குவளை மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டதை தொடர்ந்து, அடிபம்புகள் மூலமாக நீர் இரைக்கப்பட்டு, ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
திருக்குவளையில் தொன்றுதொட்டு இன்றளவும் பாரம்பரியத்தை மறவாமல் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அடிபம்புகளில் நீரை இறைத்து, அதற்கென ஒரு கால்வாயும் அமைத்து அதன் வாயிலாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். இப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டதால், தங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அடிபம்புகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழாண்டு ஆடிப்பெருக்கைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.