முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாடகை வீட்டை காலி செய்வதில் பிரச்னை: இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழலால் போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 04th August 2019 01:05 AM | Last Updated : 04th August 2019 01:05 AM | அ+அ அ- |

கீழ்வேளூர் அருகே வாடகை வீட்டை காலி செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி கீழக் காவலக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40).இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவி ஞானசவுந்தரி (36) மற்றும் குழந்தைகளுடன் தேவூர் கீழவீதியில் கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த சில மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில், கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும், ஜெயக்குமார் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவிந்தராஜ் வீட்டை காலி செய்யுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.ஜெயக்குமார் வீட்டை காலி செய்ய மறுக்கவே, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் சனிக்கிழமை தனது நண்பர்களுடன் ஜெயக்குமார் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருள்களை சாலையில் எறிந்து விட்டுச் சென்றுவிட்டாராம். இதனால், ஜெயக்குமாரின் மனைவி ஞானசவுந்தரி தனது குழந்தைகளுடன் தேவூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்காரணமாக கீழ்வேளூர்-கச்சனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில், இப்பிரச்னை காரணமாக, அப்பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், டிஎஸ்பி அர்ச்சனா (பயிற்சி) மேற்பார்வையில் தேவூர் கீழவீதி, சின்னக் கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.